உலகம்

கழிவறைக் கோப்பைக்குள் பதுங்கியிருந்த பாம்பு - அமெரிக்காவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் ஒரு வீட்டில் இருக்கும் கழிவறைக் கோப்பைக்குள் புகுந்த பாம்பின் புகைப்படம் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் உள்ள யூஃபாலா (Eufaula) பகுதியில் உள்ள ஒரு குடும்பம் சனிக்கிழமையன்று தங்கள் வீட்டிற்குள் வழக்கத்திற்கு மாறான விருந்தினர் நுழைவதைக் கண்டது. அங்குமிங்கு உலவிவிட்டு மாயமாய் மறைந்த அந்த விருந்தினர் மனிதரல்ல. பாம்பு! பதறிப் போன அந்த குடும்பம் பாம்பு எங்கே போனது என்பதை வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளது.

அப்போது தங்கள் வீட்டின் கழிவறைக் கோப்பைக்குள் அந்த பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் தவித்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவே, விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் பாம்பு மீட்கப்பட்டது குறித்த தகவலை தங்களது முகநூல் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளனர்.

“எங்கள் ஷிப்டின் போது எந்த வகையான அழைப்பைப் பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியாது. இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் கழிப்பறையில் உள்ள பாம்பு எங்கள் லிஸ்ட்லேயே இல்லை. Giant Gray Rat Snake எனும் பாம்பை எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்டு மிகவும் பொருத்தமான வசிப்பிடத்திற்கு மாற்றிவிட்டோம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.