அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலில், அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை (காங்கிரஸ்) எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்படி, ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில், குறிப்பாக அமெரிக்க அரசியலில் இந்திய-அமெரிக்க வேட்பாளர்களின் பங்கு அதிகரித்து வருவதுடன் அவர்களும் கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பியா டாண்டியா, அருணா மில்லர், சுஹாஸ் சுப்ரமணியம், விவேக் ராமசாமி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பேரா, ரிதேஷ் தாண்டன் உள்ளிட்ட இந்திய வம்சாவளிகள் இத்தேர்தலில் களம் கண்டுள்ளனர். இதில், புளோரிடாவின் 22ஆவது நாடாளுமன்றத் தொகுதியில் பியா டாண்டியா வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் வர்ஜீனியாவில் சுஹாஸ் சுப்ரமணியம் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். அதேபோல், மேரிலாந்து துணை ஆளுநராக அருணா மில்லர் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இவர்களைத் தவிர ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.