US court issues summons to high-ranking Indian officials  Reuters
உலகம்

இந்திய உயர் அதிகாரிகளுக்கே சம்மன் : அமெரிக்க நீதிமன்றம் அடாவடி.. அஜித் தோவல் வழக்கில் நடந்தது என்ன?

இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கே அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

Praveen Joshva L

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த குர்பத்வந்த் சிங் பண்ணூன் (Gurpatwant Singh Pannun) பின்னர் அமெரிக்காவுக்கு சென்று அங்கு குடியுரிமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு கோரும் கோரிக்கையை முன்வைத்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Gurpatwant Singh Pannun

மேலும், காலிஸ்தான் தனி நாட்டை உருவாக்க SFJ என அழைக்கப்படும் ‘சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs For Justice - SFJ) என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு இந்திய அரசு இவரது SFJ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்துத் தடைசெய்தது. அதோடு 2020ம் ஆண்டு UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) விதிகளின் கீழ், இந்திய அரசால் குர்பத்வந்த் சிங் தனிநபர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பிருப்பதாகவும் குர்பத்வந்த் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு குர்பத்வந்த் சிங் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தன்னை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval), ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் (Samant Goel) உள்ளிட்ட இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ajit doval

தொடர்ந்து இந்த வழக்கில் அஜித் தோவல் மற்றும் சமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், இந்த சம்மன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal), இந்திய உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் புனையப்பட்டது என்றும், வெளிநாட்டு நீதிமன்றங்கள் இந்தியாவில் உள்ள நபர்களுக்குச் சம்மன் அனுப்ப வேண்டுமென்றால், அது இந்தியச் சட்ட அமைச்சகத்தின் மூலமாகவே முறையாக அனுப்பப்பட வேண்டும் என்றும், குறுக்கு வழிகளை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறையும் விளக்கமளித்துள்ளது. அதில் இந்த வழக்கில் தாங்கள் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவில்லை என்றும், சட்ட நடைமுறைகளின்படி சம்மன்களை நீதிமன்றம் அனுப்பியதே தவிர, குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைக்குத் அரசு பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.