Trump Reuters
உலகம்

இந்திய மாணவர்களுக்கு எதிரான ட்ரம்பின் முடிவு?? கடிவாளம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கான காலக்கெடுவைக் கட்டுப்படுத்தும் ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளுக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது.

PT WEB

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கான காலக்கெடுவைக் கட்டுப்படுத்தும் ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளுக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களுக்கு இதனால் என்ன பலன், அமெரிக்கக் கல்வித்துறையில் உண்மையில் என்ன நடக்கிறது. விரிவாகப் பார்க்கலாம்.

trump

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், அதிக ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள்... இத்தகைய காரணங்களால் இந்திய மாணவர்களின் முக்கியக் கல்வித் தேர்வாக அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால், 2025–26 கல்வியாண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6.5 சதவீதம் குறைந்து 3 லட்சத்து 39 ஆயிரத்து 435 ஆகச் சரிந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாகச் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.7 சதவீதம் குறைந்து சுமார் 2 லட்சத்து 30 ஆயிரமாகச் சரிந்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை 1,430 கோடி டாலர். இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய். இவ்வளவு பெரிய முதலீட்டுக்குப் பிறகும், படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்குமா, விசா நீட்டிக்கப்படுமா அமெரிக்காவிலேயே தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்விகள் மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

trump

இத்தகைய சூழலில், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான காலக்கெடுவைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் அரசு கொண்டுவந்த புதிய விதிமுறைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தங்களது அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் காலம் முழுவதும் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் பழைய நடைமுறை தொடர்கிறது.

எனினும், விசா நடைமுறைகளில் நிலவும் சிக்கல்களும், வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையும் நீடிக்கின்றன. இத்தகைய சூழலில், அமெரிக்கக் கல்விக் கனவை இந்திய மாணவர்கள் தொடர்ந்து துரத்துவார்களா அல்லது மாற்றுக் கல்வி இலக்குகளை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.