உலகம்

"ஸ்வஸ்திகாவை அசைக்கிறார்கள்" - கனட பிரதமர் ட்ரூடோவுக்கு அமெரிக்க இந்து அமைப்பு பதிலடி!

Veeramani

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நியூ டெமாக்ரடிக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் போராட்டகாரர்கள் "ஸ்வஸ்திகாக்களை அசைப்பதாக" குற்றம் சாட்டியதற்கு அமெரிக்காவை சேர்ந்த இந்து அமைப்பு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்காவை சேர்ந்த 'ஹிந்துபாக்ட்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் உத்சவ் சக்ரபர்தி, "இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல பழங்குடி சமூகங்களுக்கான புராதனமான மற்றும் புனித அடையாளமான "ஸ்வஸ்திகா" வை, 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஜிக்களின் வெறுப்பின் சின்னமாகிய "ஹகென்க்ரூஸ்" உடன் இணைக்க வேண்டாம் என்று ட்ரூடோ மற்றும் ஜக்மீத் சிங்கை கேட்டுக்கொள்கிறோம். இந்த தவறான கருத்து இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்பு கூக்குரலுக்கு வழிவகுக்கும். கடந்த மாதத்தில் மட்டும், கனடாவில் ஆறு இந்து கோவில்கள் சூறையாடப்பட்டன" என தெரிவித்துள்ளார்

மேலும், "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் தனது நாட்டு மக்களின் உரிமையை மதிக்க வேண்டும். கனடாவில் இருந்து வரும் போராட்டங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள எடுக்கப்படும் கொடூரமான நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் கவலைக்குரியது, கருத்து வேறுபாடுகளின் குரல்களை அடக்குவதற்கு முதல்முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்துவது, கனடாவிற்கு ஒரு சோகமான முன்னுதாரணமாகும். நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம்," என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக, ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜக்மீத் சிங் இருவரும், போராட்டக்காரார்கள் "ஸ்வஸ்திகாக்களை அசைப்பதாக" குற்றம் சாட்டினர்.