உலகம்

அமெரிக்கா: உடல்முழுதும் வளரும் முடி - மருந்தின் பக்கவிளைவால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்

Veeramani

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை மேட்டியோ ஹெர்னாண்டஸ்க்கு உயிர் காக்கும் மருந்துகளின் பக்கவிளைவு காரணமாக, மார்பு, முதுகு, கை, கால்கள், முகம் மற்றும் உடல் முழுவதும் நீளமான, கருப்பு நிற முடி வளரத் தொடங்கியது.

மேட்டியோ ஹெர்னாண்டஸ் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, அக்குழந்தைக்கு பிறவி ஹைபர் இன்சுலினிசம் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைக்கு தொடர் நடுக்கம் மற்றும் அதிகமாக சாப்பிட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரிய நோயான இது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆபத்தான இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்.

இதன்பின்னர் குழந்தை மேட்டியோ டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள என்ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அதன்பின்னர் அவரது பெற்றோர்கள், ப்ரி ஷெல்பி, மற்றும் ஜாரெட் ஹெர்னாண்டஸ்  குழந்தைக்கு அசாதாரண பக்க விளைவு ஏற்பட்டதை கவனித்தனர்.

"மருந்து உட்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் மாறத் தொடங்கியது. முடி வளர்தல் முதலில் அவனது தலை மற்றும் நெற்றியில் தொடங்கியது, பிறகு அவனது கால்கள், கைகள்,முதுகு, வயிறு, தொடை  எல்லா இடங்களிலும் பரவியது. அவன் பிறந்த போது வழுக்கை இருந்தது ஆனால், சில வாரங்கள் மருந்து உட்கொண்ட பிறகு சிறிய கொரில்லா போல அவன் மாறிவிட்டான் " என அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மொட்டையடிக்க முடியுமா என்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டனர், இருப்பினும், அவர்கள் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தினர். இந்த நோய் அரிதாக இருப்பதால் மருத்துவர்களும், பெற்றோர்களும் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.