Mojtaba Khamenei, Kharg Island, Trump x page
உலகம்

ஈரானின் ’மணிமகுடம்’ மீது தாக்குதல்.. ட்ரம்ப் வைத்த குறி? ’கார்க் தீவு’ ஏன் முக்கியம்?

ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் கார்க் தீவு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

Prakash J

ஈரானின் மணி மகுடம் என்று சொல்லப்படும் கார்க் தீவை அமெரிக்கப் படைகள் அழித்ததாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்த தீவில் உள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கும் அழிக்கப்பட்டதாகவும், அதன் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு அடுத்து குறிவைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு அந்த தீவு ஏன் முக்கியம் என்பது குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் தாக்குதல் இன்றுடன் 15ஆவது நாளை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஐஆர்ஜிசி தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர், பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே, ஆயுதப்படைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செய்யத் அப்தோல்ரஹிம் மௌசவி மற்றும் பிற மூத்த நபர்கள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர, 175 பள்ளிச் சிறுமிகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணையை முடக்கிய ஈரான்

மேலும், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள 33 கி.மீ. அகலம் கொண்ட ஹார்முஸ் நீரிணைப் பாதையை ஈரான் முடக்கியுள்ளதாலேயே எரிசக்தி தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரானின் மணி மகுடமான கார்க் தீவு அழிப்பு

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உலகின் 20% கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து இந்த ஒரு குறுகிய கடல்வழிப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பீப்பாய்கள் எண்ணெய் இந்தப் பாதையின் வழியாக உலக நாடுகளைச் சென்றடைந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள முடக்கத்தால் உலக அளவில் எரிசக்தி தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் மணி மகுடம் என்று சொல்லப்படும் கார்க் தீவை அமெரிக்கப் படைகள் அழித்ததாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்த தீவில் உள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கும் அழிக்கப்பட்டதாகவும், அதன் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு அடுத்து குறிவைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்ததாகும். கண்ணியத்தின் காரணமாக, அந்தத் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்பை தாம் அழிக்க விரும்பவில்லை. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் ஈரான் அல்லது வேறு யாராவது தலையிட முயன்றால் தாக்குதல் நடத்தப்படும். ஈரானின் ராணுவமும் பயங்கரவாத ஆட்சியும் பணிந்துபோவது புத்திச்சாலித்தனமாக இருக்கும்” என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் பொருட்டே ட்ரம்ப், கார்க் தீவிற்கு குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களால் இயக்கப்படும் எண்ணெய் நிலையங்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தப்போவதாக ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

கார்க் தீவு என்பது என்ன? அது ஈரானுக்கு ஏன் முக்கியம்?

கார்க் தீவு ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவிலும், ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து சுமார் 483 கி.மீ வடமேற்கிலும் அமைந்துள்ளது. கார்க் தீவு ஏராளமான எண்ணெய் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இங்குள்ள அபூசர், ஃபோரூசான் மற்றும் டோரூட் ஆகிய மூன்று பெரிய கடல் வயல்களிலிருந்து கச்சா எண்ணெய் முனையத்தை அடைகிறது. தீவுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களுடன் கடல் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இது ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதிக்கான ஏற்றுமதி முனையமாக செயல்படுகிறது.

500,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி

நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை நிர்வகிக்கும் முக்கிய முனையத்தை இது கொண்டிருப்பதால், ஈரானின் எண்ணெய் வலையமைப்பில் இந்தத் தீவு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தால் நடத்தப்படும் மூன்று முக்கிய எரிசக்தி வசதிகளையும் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று ஃபாலத் ஈரான் எண்ணெய் நிறுவனம் ஆகும், இது தினமும் 500,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது மற்றும் நாட்டின் நான்கு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்களில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

போருக்கு மத்தியில் ஈரான் எண்ணெய் ஏற்றுமதி

இந்தத் தீவில் கார்க் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமும், எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை சேமித்து ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய நிறுவலும் உள்ளது. கார்க் தீவு ஈரானின் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் நிதியளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1960கள் மற்றும் 1970களில் ஈரானின் எண்ணெய் விரிவாக்கத்தின் போது கார்க் தீவு பெரும் வளர்ச்சியைக் கண்டது.

இதற்கிடையே, அதிகரித்து வரும் பதற்றங்கள் இருந்தபோதிலும், ஈரான் தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது, அதே நேரத்தில் பல வளைகுடா உற்பத்தியாளர்கள் ஈரானின் தாக்குதல்களுக்கு பயந்து ஏற்றுமதியை நிறுத்திவிட்டனர். TankerTrackers.com ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் கார்க் தீவில் பல மிகப் பெரிய கச்சா எண்ணெய் டேங்கர்கள் ஏற்றப்படுவதைக் காட்டின. போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரை ஈரான் ஒருநாளைக்கு 1.1 மில்லியன் முதல் 1.5 மில்லியன் பீப்பாய்கள் வரை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா இந்த தீவு மீது நடத்திய தாக்குதல் ஓர் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பின் சில பகுதிகளைத் தாக்க அமெரிக்கா தயாராக இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாகவும் தோன்றுகிறது.