உலகம்

அமெரிக்காவின் குவாம் தீவின் மீது தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா...!

அமெரிக்காவின் குவாம் தீவின் மீது தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா...!

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவை தாக்குதவதற்கு திட்டமிட்டு வருவதாக வட கொரியா கூறியிருக்கிறது. நடுத்தர மற்றும் நெடுந்தொலைவு ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

குவாம் தீவு என்பது அமெரிக்காவுடன் இணையாத தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகும். வடகொரியாவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குள் இது அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் படைத்தளமாகவும் செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் கொரியப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வடகொரியாவின் எச்சரிக்கைக்கு சற்று முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அவர், அமெரிக்காவைச் சீண்டினால் கடும் சீற்றத்தைச் சந்திக்க நேரிடும். அமெரிக்காவைச் சீண்டாமல் இருப்பதே வடகொரியாவுக்கு நல்லது என்று அவர் கூறினார்.

ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் வகையிலான சிறியவகை அணுகுண்டுகளை வடகொரியா தயாரித்திருப்பதாக அமெரிக்க உளவுத் துறையினர் அண்மையில் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்தே ட்ரம்பின் எச்சரிக்கை வெளியானது. அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலடியாகவே வடகொரியா வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறது.

வடகொரியாவின் அறிவிப்பு பழிவாங்குவதற்கான பேச்சே தவிர‌ மிரட்டல் அல்ல என குவாம் தீவின் ஆளுநர் எட்டி கால்வோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ செய்தியில், வடகொரியாவின் அறிவிப்பு தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளோம். குவாம் ஒரு அமெரிக்க மண், வெறும் ராணுவத் தளமாக மட்டும் இதைக் கருதக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.