மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது. பின்னர், அந்தப் போரானது 12-வது நாளை எட்டிய நிலையில் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அறிவித்தார்.
இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானிலுள்ள 3 அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அதனை ஈரான் மறுத்தது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 'நடான்ஸ்' 'ஃபோர்டோ' மற்றும் 'இஸ்ஃபஹான்' ஆகிய அணுசக்தி தளங்கள், அமெரிக்கத் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்ததை ஈரான் அரசு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் இன்று நேற்றை தினம் , இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதில், “எங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதை உறுதியாகச் சொல்லலாம்” எனக் கூறியுள்ளார். எனினும், இதுகுறித்த வேறு எந்த தகவல்களும், ஈரான் வெளியுறவுத் துறை தரப்பில் வெளியிடப்படவில்லை. ஈரானின் அணுசக்தி தளங்கள் சேதமடையவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அந்த தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈரானும் அதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.