விபத்துக்குள்ளான விமானத்தில் சிக்கிக்கொண்டு, காயங்களுடன் ரயில் தண்டவாளத்தில் தவித்த விமானியை, போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அருகில் உள்ளது பாகோய்மா என்ற பள்ளத்தாக்கு. இங்கு ஒயிட்மேன் என்ற விமானநிலையத்திலிருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருவர் மட்டுமே பயணிக்க கூடிய சிறியரக விமானத்தில் விமானி ஒருவர் கிளம்பியுள்ளார். ஆனால், கிளம்பிய சிறிதுநேரத்திலேயே, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், சான் பெர்னான்டோ சாலையில் இருந்த ரயில் தண்டவாளத்தின் மீது விழுந்தது. இதில் பலத்த காயங்களுடன் விமானி விமானத்திலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த போலீசார், விமானியை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டிருந்தநிலையில், திடீரென ரயில் ஒன்று தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இதனைக் கண்ட போலீசார், உடனடியாக உடைந்துகிடந்த விமானத்தில் இருந்து விமானியை துரிதகதியில் வெளியே இழுத்து காப்பாற்றினர். அவர்கள் காப்பாற்றிய அடுத்த நொடி, ரயில் உடைந்துகிடந்த விமானத்தின் பாகங்கள் மீது மோதி சென்றது. இதில் விமானத்தின் சில துண்டுகள், அங்கிருந்த போலீசார் மீது லேசாக பட்டு சென்றது. நல்வாய்ப்பாக விமானியை தவிர யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் உடலில் பொருத்தியிருந்த சிறிய கேமாராவில் பதிவானது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானியை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த விமானியின் உடல்நிலை சீராக உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.