ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் இருக்கிறது கிளனெல்க் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். இங்கு ஊரடங்கு காரணமாக விற்பனை செய்யப்படாத பீர் பானத்தை பல மாதங்களாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றிவருகின்றனர். அதிலிருந்து கிடைக்கும் மின்சக்தியை கழிவு நீர் சுத்திகரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் மதுவிடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டன. அதனால் பீர் பானங்கள் விற்பனையின்றி தேங்கியதால், அதை தயாரிக்கும் பெரும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தெற்கு ஆஸ்திரேயாவில் வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் மதிப்புள்ள பீர் பானங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. இங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எரிவாயுவாக மாற்றப்பட்டுப் பயன்படுகிறது.
கழிவுநீர் கசடுகளுடன் தொழிற்சாலைகளின் ஆர்கானிக் கழிவுகளைக் கலந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பிறகு அது மின்சக்தியாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் மின்சக்தி அவர்களுக்கான தேவையில் 80 சதவீதத்தைப் பூர்த்தி செய்துவருகிறது.