பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதால், அந்நாட்டுக்கு நிதியாக ஒரு டாலர் கூட வழங்கக் கூடாது என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே வலியுறுத்தியுள்ளார்.
'தி அட்லாண்டிக்' பத்திரிகைக்கு பேட்டியளித்த நிக்கி ஹாலே, அமெரிக்காவை காயப்படுத்தும் எந்தவொரு நாட்டுக்கும் நிதியுதவி வழங்கக் கூடாது என்றும், ஒருவேளை வழங்கப்பட்டு வந்தால், உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். எந்த நாட்டுடன் இணக்கமாக இருக்க வேண்டும், எந்த நாட்டுடன் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் கொள்கை வகுக்க வேண்டும் என்றும் நிக்கி ஹாலே வலியுறுத்தினார்.
கோடிக்கணக்கில் டாலர்கள் வழங்கினாலும், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்க வீரர்களையே கொன்று வருகிறது என்றும், எனவே அந்நாட்டுக்கு ஒரு டாலர் கூட நிதியாக வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இம்மாத இறுதியுடன் ஹாலே பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்திருப்பது, அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.