தெற்கு மற்றும் மத்திய சீனாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தீவுகளாக மாறிய வீடுகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சில பகுதிகளில், வெள்ளநீர் முதல் மாடி வரை உயர்ந்தது. வாகனங்கள் மூழ்கி அடித்து செல்லப்பட்டன. சுய்ஜியாங் ((SUIJIANG)) ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹுவைஜி மாநகரில் ((HUAIJI)) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பருந்துப் பார்வை காட்சிகளில், உயரமான குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் மரங்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன. பெரும்பாலான இடங்கள் எல்லாம் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. பேரழிவுக்கு முன்னதாக கடந்த வாரம் குவாங்சி மாகாணத்தில் WUTIP என்ற புயல் தாக்கியது. இதன் பின்னர் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் குவாங்டாங் மாகாணத்தின் சூழல் மோசமாகியுள்ளது.
வரும் நாட்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெனான், அன்ஹுய், ஹுபெய், ஹுனான், குயிச்சோ, குவாங்சி ஆகிய ஆறு மாகாணங்களில் சிவப்புநிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டில் சீனாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின்னர் இத்தகைய பரவலான வெள்ள அபாயம் முதன்முறையாக உருவாகி உள்ளது. சீனாவின் முக்கிய பொருளாதார மண்டலங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.