2026-ல் உலகை உலுக்கப்போகும் ‘சூப்பர் எல்-நினோ’ web
உலகம்

2026-ல் உலகை உலுக்கப்போகும் ‘சூப்பர் எல்-நினோ’! விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன? விவரம்

பல தசாப்தங்களில் இல்லாத மிகசக்திவாய்ந்த சூப்பர் எல்-நினோ நிகழ்வு 2026ஆம் ஆண்டில் ஏற்படக் கூடும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.

PT WEB

பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ‘சூப்பர் எல்-நினோ’ காரணமாக உலக வானிலை அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதச் செயல்களால் ஏற்கனவே அதிகரித்துள்ள வெப்பம் மேலும் உயரும் நிலையில், 2026-ல் உச்சத்தை எட்டும் இந்த மாற்றம் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியாவில் கடும்வறட்சி, காட்டுத்தீ, உணவுக் குறைபாடு, விலை உயர்வு போன்ற பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது.

மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் உலகளாவிய வானிலையை தலைகீழாக மாற்றும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும்வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படக்கூடும் எனவும் ஐநா எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டவுள்ள இந்த எல்-நினோவின் தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் உலகளவில் உணவு பொருட்களின் விலை உயர்ந்து கடும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐநாவுக்கான உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.