பட்டினியில் வாடும் காசா குழந்தைகள் web
உலகம்

காசாவில் நிலவுவது வெறும் பசியல்ல.. உயிரை குடிக்கும் கொடூரம்! பட்டினியில் 23 லட்சம் மக்கள்!

மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி மனித நெஞ்சை நெருக்குகிறது.

PT WEB

குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள்... ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை நாளைக்கு சேமிக்கிறார். காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமையினை இக்காட்சிகளே உணர்த்துகின்றன.

3 மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு..

ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16% பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மருத்துவமனைகளில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேலின் தடைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள், உதவித் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதனால், மக்கள் தினசரி உணவுப் பொருட்கள், குறிப்பாக மாவு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்காக போராடுகின்றனர். உணவை கட்டுப்படுத்தி மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் பட்டினியின் கொடுமையை மேலும் மோசமாக்குகின்றன.

காசாவில் வசிக்கும் 23 லட்சம் மக்களும் பசியின் விளிம்பில் உள்ளதாகவும், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனவும் ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்துள்ளது. மேலும், காஸாவை உலகின் மிகப்பெரிய பசிப்பரப்பு என்றும் அறிவித்துள்ளது.

காசாவில் ஒவ்வொரு நொடியிலும் உயிரைத் தீண்டும் அபாயமாக மாறியுள்ள பசி கொடுமைக்கு முடிவு எப்போது?