ஐக்கிய நாடுகள் சபை Pt web
உலகம்

புதிய ஐநா பொதுச்செயலாளர் யார்? நான்கு பேர் மத்தியில் கடும் போட்டி.!

ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடையவிருக்கும் நிலையில், புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி தொடங்கியுள்ளது.

Premkumar S

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அக்டோபர் 24 1945 ஆண்டு உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை தீர்த்து அமைதியை நிலைநாட்டவும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது. இதில், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டரஸ் இருந்து வரும் நிலையில், இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்த சூழலில் தான் அடுத்த பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான போட்டி நிலவி வரும் நிலையில், 4 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அன்டோனியோ குட்டரஸ்

தற்காலத்தில், பல்வேறு போர்களாலும், புவிசார் அரசியல் பதட்டங்களிலும் உலகம் சிக்குண்டுள்ள நிலையில், புதிய ஐநா பொதுச்செயாளாலர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சவால்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், உலகிற்கு முன்னெப்போதையும் விட ஐக்கிய நாடுகள் சபையும், வலுவான கொள்கைப்பிடிப்புள்ள மற்றும் திறம்பட வழிநடத்தக்கூடிய ஒரு பொதுச்செயலாளரும் தேவைப்படுகிறார்கள் என பல்வேறு தரப்பினர்களும் கூறிவருகின்றனர்.

இந்தசூழலில் தான், சிலியின் முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர் ஆணையருமான மிஷெல் பாஷெலெட், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் க்ரோசி, ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் பொதுச் செயலாளர் ரெபெக்கா கிரின்ஸ்பான், செனகலின் முன்னாள் ஜனாதிபதி மேக்கி சால் ஆகிய நான்கு பேர் இடையே போட்டி நிலவுகிறது.

மிஷேல் பாஷெலெட், ரெபெக்கா கிரின்ஸ்பான்

ஐநா சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு முதல் ஆண்களே பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், மிஷேல் பாஷெலெட் அல்லது ரெபெக்கா கிரின்ஸ்பான் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் பொதுச்செயலாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் ஐநாவின் முதல் பெண் பொதுச்செயலாளர் என்ற பெருமைக்குள்ளாவர். பொதுச்செயலாளருக்கான தேர்வு இந்தாண்டின் பிற்பகுதிக்குள் உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.