ஈரான் போரால் உணவு பஞ்சம் web
உலகம்

உச்சத்தை எட்டும் ஈரான்-அமெரிக்கா போர்.. உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா திடீர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளதாகவும் இது நீடிக்கும் பட்சத்தில் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஐநா சபை எச்சரித்துள்ளது.

PT WEB

35 நாட்களாக நீடிக்கும் ஈரான்-அமெரிக்கா போர் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு தள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் தாக்கமாக உணவுப் பொருட்கள் உற்பத்தி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, தானியங்கள், தாவர எண்ணெய், பால் பொருட்கள் விலை மார்சில் கணிசமாக உயர்ந்ததாக ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக அதாவது 35 நாட்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், எரிசக்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

போர் காரணமாகக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்தது, இது நேரடியாக உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈரான் - அமெரிக்கா

இந்த சூழலில் தான் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, தானியங்கள், தாவர எண்ணெய் மற்றும் பால் பொருட்களின் விலைக் குறியீடு மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐ.நா. எச்சரிக்கை..

ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள முடக்கம், உரங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சர்வதேசச் சந்தைக்கு வந்து சேருவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள், இந்தத் திடீர் விலையேற்றத்தால் பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.

போர் நீடிக்கும் பட்சத்தில், வரும் மாதங்களில் கோதுமை, சோளம் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் இருப்பு குறைந்து, அவற்றின் விலை மேலும் 20% முதல் 30% வரை உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உணவு

உலக நாடுகள் தங்களது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன, இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த போர் விரைவில் முடிவடைய வேண்டும் என உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் அதே வேளையில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நடவடிக்கை போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருந்து வருகிறது உலக நாட்டு மக்களை கவலையடைய செய்திருக்கிறது.