பாலஸ்தீன சமூகத்தின் தொடர்ச்சியை அழிப்பதற்காக, காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் குழந்தைகளை குறிவைத்துக் கொல்வதாகவும், 2023 அக்டோபர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 20,179 பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இது மொத்த பாலஸ்தீனிய மரணங்களில் கிட்டத்தட்ட 30% ஆகும் என்றும் ஐ.நா.வின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 74 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேலியப் படைகளின் சோதனைகளும், அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்தசூழலில் தான், பாலஸ்தீன சமூகத்தின் தொடர்ச்சியை அழிப்பதற்காக, காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் குழந்தைகளை குறிவைத்துக் கொன்று வருவதாக சமீபத்தில் ஐநா சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த அறிக்கையில், காசாவில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார வசதிகள் அழிக்கப்பட்டுள்ளது. இது பாலஸ்தீனியர்களின் எதிர்கால சந்ததி மற்றும் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமிட்ட நடவடிக்கை.இந்தச் செயல்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும் பெண்கள், ஆண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பாலஸ்தீனியர்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குமுறை அமைப்பை நிலைநிறுத்துவதற்கும் பாலியல் வன்கொடுமையை இஸ்ரேல் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த உளவியல்ரீதியான பாதிப்புகள் ஒரே இரவில் சரியாகிவிடாது என்றும், இதன் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடரும் எனவும் ஐநா வேதனை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஐ.நா. சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவர் சீனிவாசன் முரளிதர் கூறுகையில், பாலஸ்தீனியக் குழந்தைகள் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளால் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஐநாவின் இந்த அறிக்கையை அவதூறு நிறைந்த போலி அறிக்கை என இஸ்ரேல் விமர்சித்திருப்பதுடன் உறுதிப்படுத்தப்படாத இரண்டாம் தரப்பு ஆதாரங்களை ஐ.நா.வின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.