ரஷ்யாவுடனான முதல் சுற்று சமாதானப் பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினராக கலந்துகொண்ட டெனிஸ் கிரீவ் என்பவர் உளவாளி என்று குற்றச்சாட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி பெலாரஸில் நடந்த ரஷ்யாவுடனான அமைதிப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட 45 வயதான உளவுத்துறை அதிகாரி டெனிஸ் கிரீவ், கீவ் நகரில் உள்ள பேச்செர்ஸ்க் கோர்ட்டுக்கு அருகே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர், ரஷ்யாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் கொல்லப்பட்டதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி ஹொன்சரெங்கோ தனது டெலிகிராம் சேனலில் எழுதியுள்ள பதிவில்,"உக்ரைனின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்ட உக்ரேனிய பேச்சுவார்த்தை பிரதிநிதி டெனிஸ் கிரீவ் தேசத்துரோக குற்றச்சாட்டு காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார் " என தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் டுபின்ஸ்கியும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையம் கிரீவ் ஒரு உளவாளி என்று ஒப்புக்கொண்டது, ஆனால் அவர் சிறப்புப் பணிகளை மேற்கொள்வதாகவும், உக்ரைனைப் பாதுகாப்பதாகவும் கூறினார், இது அவர் ஒரு இரட்டை முகவர் என்ற ஊகத்தைத் தூண்டியது என தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சிறப்பு பணிகளை நிறைவேற்றும் போது மூன்று உளவாளிகள் கொல்லப்பட்டனர், இவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தின் ஊழியர்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.