கையில் தொலைபேசி எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உக்ரைனில் இருந்து தப்பிய சிறுவன் தாயுடன் மீண்டும் இணைந்த உணர்ச்சிமிக்க புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஹசன் பிசெக்கா 11 வயதேயான உக்ரைன் சிறுவன். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் தனது சொந்த ஊரிலிருந்து 750 மைல்கள் தூரத்திலுள்ள ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிற்கு கிளம்பினான். ஒரு பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் கையில் எழுதிக் கொண்டு பயணிக்கத் துவங்கினான். ஹசன் ஸ்லோவேகியா எல்லையை அடைந்ததும், அங்கிருந்த அதிகாரிகள் சிறுவனை பத்திரமாக தங்க வைத்தனர். சிறுவனின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிறுவனின் தாய் ஜூலியாவால் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற இயலவில்லை.
பாட்டிக்கு உடல்நிலை சரியானதும், பாட்டியும் தாயும் ஸ்லோவேகியா நோக்கி புறப்பட்டனர். இந்த வாரத் துவக்கத்தில் ஸ்லோவேகியா வந்து சேர்ந்ததும் சிறுவனை தேடத் துவங்கினர். சிறுவன் கையில் எழுதி அனுப்பிய மொபைல் எண்ணை வைத்து தேடி சிறுவனை கண்டுபிடித்தனர். உணர்ச்சி மிகுதியில் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவத் துவங்கியுள்ளது. தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் எதிர்காலம் என்னவாகும் என பெரும் அச்சம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஹசனின் அப்பா சிரியாவைச் சேர்ந்தவர். சிரியா போரில் தனது அப்பாவை இழந்து, தாய் ஜூலியா உடன் உக்ரைனில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்தனர். தற்போது அங்கும் போர் வந்ததால் மீண்டும் குடும்பத்துடன் ஸ்லோவேகியா வந்து அடைக்கலம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.