அமெரிக்க அதிபர் மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இரவு பகலாக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் தாக்குதல் தொடுத்தது.
14 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 250 ட்ரோன்கள் மூலம் கடுமையான வான்வாழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் கீவ் நகரின் ஆறு மாவட்டங்களில் தீவிர சேதம் ஏற்பட்டது.
குறிப்பாக, ஒபோலோன் மாவட்டத்தில் குடியிருப்புகள் தீக்கிரையாகின. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். உக்ரைன் விமானப்படை, ரஷ்யாவின் 6 ஏவுகணைகள் மற்றும் 245 ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதல் கீழ்த்தரமானது என்று கண்டித்தார். ரஷ்யா ஒவ்வொரு நாளும் பயங்கரவாதம் மற்றும் கொலைகளால் போரை நீட்டிப்பதாகவும், உலகம் வலுவான பதிலடியை தரவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
தாக்குதலுக்கு முன்பு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 370 கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இது 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யாவின் முழுமையான போருக்கு பின்னர் நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாகும். இரு நாடுகளும் ஒவ்வொன்றாக 1000 கைதிகளை பரிமாற ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், இத்தகைய தாக்குதல்கள், சமாதான பேச்சுவார்த்தைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன. உலக நாடுகள், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.