அமெரிக்காவை நம்பாமல் ஐரோப்பா தனி ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்று உக்ரைன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் நேட்டோ உறுப்பினர் நாடான டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்தை அமெரிக்காவோடு இணைக்கவுள்ளதாக பேசினார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கிரீன்லாந்துக்கு சிறிய அளவிலான தங்கள் படைகளையும் அனுப்பின. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், நேட்டோ அமைப்புக்கு அமெரிக்காவே அதிக பங்களிப்பு செய்துள்ளது என்றும், அந்த அமைப்பால் அமெரிக்காவுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். அதோடு ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் வராத நிலையில், நேட்டோ அமைப்பையே கலைக்கும் விதமாக ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவை நம்பாமல், ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பிற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், இதன் பின்னர் அமெரிக்கா நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும் ஐரோப்பா இருக்க முடியாது என்றும், அமெரிக்கா வெளியேறினால், லிதுவேனியா அல்லது போலந்து மீது தாக்குதல் நடந்தால் யார் பதில் சொல்வார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுகிறது. இனி ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பிற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ என்னவாகப் போகிறது என்பதை நாம் இப்போதே யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல, அமெரிக்காவைப் பின்தொடரும் நாடாக மட்டுமே இல்லாமல், ஐரோப்பா ஒரு வலிமையான சக்தியாகத் தன்னைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகப்போவதாகச் சொல்வது, புதினுக்குக் கொடுக்கப்படும் ஒரு பரிசு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.