ஜெலன்ஸ்கி, புதின் x page
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் | விமானச் சேவைகள் நிறுத்தம்!

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களினால், ரஷ்யா தலைநகரில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்காக ரஷ்ய அரசு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் அரசு அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இதனாலேயே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரைனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.

புதின், ஜெலன்ஸ்கி

இந்தப் போர்நிறுத்தம் மே 8ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் தேதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரைனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில், அந்நாடு தற்போது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களினால் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளது.