உலகம்

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை? எங்கே... எப்போது?

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை? எங்கே... எப்போது?

கலிலுல்லா

நான்கு நாட்களாக ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன், பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் கடந்த நான்கு நாட்களாக பலமுனை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் ஞாயிற்றுக்கிழமை தனது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள், தலைநகர் கீவுக்கு அடுத்த முக்கிய நகரான கார்கிவைக் கைப்பற்றின. இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் அறிவித்ததையடுத்து பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால், பெலாரசில் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த உக்ரைன் வேறு சில ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை பட்டியலிட்டது.

இதை ரஷ்யா நிராகரித்த நிலையில், பெலாரஸிலேயே பேச்சுவார்த்தை நடத்த தற்போது உக்ரைன் ஒப்புக்கொண்டிருப்பதாக ரஷ்ய தரப்பு பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரஸின் கோமல் பகுதிக்கு அனுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் பிரதிநிதிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கான இடம் தேர்வு செய்யப்படும் என்றும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.