உலகம்

”இறுதிச் சடங்கில் என் சிதையை சாப்பிட்டால் போதும்” - விநோத விருப்பத்தை தெரிவித்த நபர்!

JananiGovindhan

நம்மில் பலருக்கும் கடைசி ஆசை என்ற ஒன்று எப்படியும் இருக்கும். குறிப்பாக இறுதி சடங்குகள் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்பவர்களும் இருப்பார்கள். அதில் சிலர் தத்தம் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் படி சொல்வார்கள், இன்னும் சிலர் இறுதிச் சடங்குகள் ஊரே வியந்துப் பார்க்கும் அளவுக்கு இருக்கும்படி விரும்புவார்கள். இப்படியாக பட்டியல்கள் நீளும்.

அதேவேளையில் சிலர் விசித்திரமான , நூதனமான கடைசி ஆசைகளும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சிதையை குடும்பத்தினர் உண்ண வேண்டும் என்பதை கடைசி ஆசையாக கொண்டிருந்தார் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, இயன் அட்கின்ஸன் என்பவர் மக்களின் கடைசி ஆசை குறித்து நடத்திய ஆய்வில் பல பகீரான, ஆச்சர்யமளிக்கக் கூடிய விருப்பங்கள் தெரிய வந்ததாக டெய்லி ஸ்டார் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில்தான் பிரிட்டிஷார் ஒருவர் தன்னுடைய சிதையை அவரது குடும்பத்தார் உண்ண வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியது தெரிய வந்ததாம்.

குறிப்பாக, அந்த நபரது சிதை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தட்டில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தாராம். இருப்பினும் இங்கிலாந்தில் நரமாமிசம் சாப்பிடுவது சட்டவிரோத செயல் என்பதால் அந்த நபரின் சிதையை சாப்பிட பிரிட்டன் அரசு அதிகாரிகள் அனுமதிக்காததோடு, இதன் மீது ஏதேனும் முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் செய்திருக்கிறார்களாம்.

இதேபோல, மற்றொரு நபரிடம் ஆய்வு நடத்தியதில் அவர் தன்னை சவப்பெட்டியில் ஏற்றும் போது சான்ட்டா க்ளாஸ் போல அலங்கரிக்க வேண்டும் என்றாராம். மற்றொருவர் தனது சவப்பெட்டியின் மீது மண், கற்களுக்கு பதில் இனிப்புகளை அள்ளி வீச வேண்டும் என்றும், துக்கம் அனுசரிப்பவர்கள், ஹனி மான்ஸ்டரை போல உடையணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

மேலும் விவசாயத் தொழிலாளி ஒருவர் தனது சவப்பெட்டியை வைக்கோல் படுக்கையுடன் வரிசையாக வைக்கும்படி கேட்டார். மற்றொரு நபர் எல்விஸ் பிரெஸ்லி போல் தனக்கு உடையணிந்து தனது சவப்பெட்டியை அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சன் லைஃப் நிறுவனர் இயன் ஆட்கின்ஸன் லண்டன் செய்தி தளத்திடம் பேசியபோது, “ஐந்தில் நான்கு பேர் தங்களுடைய இறுதிச் சடங்குகள் ஒரு கொண்டாட்டமாக நடைபெற வேண்டும் என்றே கூறியிருக்கிறார்கள்” என்றுள்ளார்.