லண்டன் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இன்னும் பலரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான காவலர்களும், புலனாய்வு அதிகாரிகளும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஒரு காவலர் மற்றும் தாக்குதல் நடத்த வந்த நபர் ஆகியோர் அடங்குவார்கள். வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் காரை வேகமாக ஓட்டி வந்த நபர் பாதசாரிகள் மீதும் பிற வாகனங்கள் மீதும் மோதினார். பின்னர் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். தடுக்க வந்த காவல்துறை அதிகாரியைக் கத்தியால் குத்தினார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார். தாக்குதலின்போது, நாடாளுமன்றத்தில் இருந்த பிரதமர் தெரசா மே, பத்திரமாக அவரது இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது தாக்குதலின் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.