உலகம்

`கரன்ட் பில்’லால் நொந்துப்போன வங்கி ஊழியர்.. நூதன டெக்னிக்கால் மிச்சமான 3 லட்சம்.. எப்படி?

JananiGovindhan

மின்சார கட்டண பிரச்னை உலக அளவில் எப்போதும் தலையை பிய்த்துக்கொள்ளக் கூடிய வகையிலேயே இருக்கும். நமக்கு நிகரான யூனிட்டில் வேறொருவர் தனது வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தாலும், கொஞ்சம் ஏறக்குறைய இன்னொருவரின் வீட்டின் யூனிட் அளவு அதிகமானார் மின்கட்டணமும் அப்படியே இரு மடங்காகிவிடும். இதனையறிந்து புலம்புவோர் இல்லாது போனால்தான் அரிதே.

இப்படியான புலம்பல்களில் இருந்தும் அதிகளவிலான மின் கட்டணத்திலிருந்தும் தப்பிப்பதற்காகவே விசித்திரமான நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தந்தை. அதன்படி வீட்டில் மின்சாரமே பயன்படுத்தாத படியும், வீட்டில் வலம் வரும் போது தலையில் மாட்டிக்கொள்ளும் வகையிலான head torch-ஐயும் அணியும்படி கூறி நடைமுறைப்படுத்தியிருக்கிறார் அந்த தந்தை.

சாவ்தார் டோடோரோவ் என்ற 53 வயதான இவர், வங்கியில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக டெகோரேட்டராகவும் இருந்து வருகிறார். அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கான நெருக்கடியை குறைக்கும் வகையில்தான் இந்த யோசனையை செயல்படுத்தியிருக்கிறார்.

மின் கட்டணம் மட்டுமே மாதாமாதம் 320 பவுண்ட் அதாவது 30,000 ரூபாய்க்கு மேல் வருவதால் வீட்டில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தலையில் மாட்டும் டார்ச்சை பயன்படுத்த வைத்திருக்கிறார். அதன்படி டோடோரோவும் அவரது மனைவி மோடா (49), இவர்களின் பிள்ளைகள் நிக்கோல் (20), டியோ (14) ஆகிய அனைவரும் வீட்டில் உள்ள எந்த லைட்களையும் போடாமல் head torch-ஐ மட்டும் பயன்படுத்தியதால் 8.48 பவுண்ட் அதாவது 800 ரூபாய் மட்டுமே கரன்ட் பில் வந்ததாகவும் இதன் மூலம் ஆண்டுக்கு 3,800 பவுண்ட் (3 லட்சத்து 60,000 ரூபாய்) மிச்சமாகியிருக்கிறதாம்.

இதுகுறித்து டெய்லி மெயில் தளத்திடம் பேசியுள்ள சாவ்தாரின் மனைவி மோடா, “என் கணவரின் இந்த விசித்திரமான பாலிசியை செயல்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் head lamp-ஐ போட்டுக்கொள்வது சிரமமாகவே இருக்கிறது. அந்த ஹெட் லாம்ப்ஸால் பயமாகவும், சமயங்களில் பாதுகாப்பாக இல்லாதது போலவும் இருக்கும். நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும்போது அதை போட்டுக்கொள்ளவே மாட்டேன்” என கூறியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய டோடோரோவ், “இது 18வது நூற்றாண்டுக்கே போனதுபோல இருக்கிறது. மாத கடைசியில் கரன்ட் பில் எவ்வளவு வருமோ என தெரியவில்லை. அதனாலேயே என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்கிறோம். அதன்படியே இப்போ வீட்டில் உள்ள லைட் ஸ்விட்ச்சை போடாமலேயே ஹெட் லாம்ப்ஸ் உடன் சுற்றி வருகிறேன். வீட்டில் டிவி பார்ப்பதையும் குறைத்துவிட்டோம்” என தெரிவித்திருக்கிறார்.