இங்கிலாந்தில் தேசிய பாதுகாப்பிற்கு வளர்ந்துவரும் ஒன்பது அச்சுறுத்தல்களில் இந்து தேசியவாதமும் காலிஸ்தானி தீவிரவாதமும் இருப்பதாக அந்நாட்டு உள்துறை அலுவலகக் கமிஷனின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தடுப்பு, ஆராய்ச்சி, தகவல் தொடர்பு பிரிவு (RICU) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு (HSAI) உள்ளிட்ட உள்துறை அலுவலக அமைப்புகளால் தயாரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில்தான் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு 2022இல் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான லெய்செஸ்டர் மோதல்களைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இந்து தேசியவாதம் இதுபோன்று அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில், முக்கியமானதாக காலிஸ்தானி தீவிரவாதம் இருப்பதாகவும், அதே பட்டியலில் இந்து தேசியவாதம் நுழைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மேலும், ’காலிஸ்தானை ஆதரிப்பவர்கள் அந்த காரணத்திற்காக வன்முறையை ஊக்குவிக்கும்போது அது கவலை அளிக்கிறது. காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அதிகரித்துவரும் செய்திகள் அதிகமாகப் பகிரப்படுகிறது. மேலும், சீக்கியர்களுக்கு எதிராக பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது பற்றிய சதி கோட்பாடுகளை அது ஊக்குவிக்கிறது” என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிக்கை கசிந்ததையொட்டி, உள்துறை அமைச்சர் டான் ஜார்விஸ், ”தீவிரவாதத்தின் வரையறையை விரிவுபடுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.