இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு அறிவித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் மொத்தம் 21,915 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு கொரோனா மரணங்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. சனிக்கிழமை ஒரே நாளில் 326 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 46,555.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்.
அத்தியாவசிய தேவையில்லாத அனைத்து வர்த்தக நிறுவனங்களும் வரும் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை மூடப்படும் என்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கத்தை போரிஸ் ஜான்ஸன் அறிவித்திருக்கிறார்.
இப்புதிய கட்டுப்பாடுகளின் படி, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பப், மதுபான கூடங்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். கட்டுமானப் பணிகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட முழு ஊரடங்கு தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.