உலகம்

துபாயில் பள்ளிகள் திறந்தும் ஆன்லைன் கல்வி.. கொரோனா பயத்தில் பெற்றோர்கள் முடிவு

துபாயில் பள்ளிகள் திறந்தும் ஆன்லைன் கல்வி.. கொரோனா பயத்தில் பெற்றோர்கள் முடிவு

webteam

எந்த ஸ்கூல் பையையும் தயார் செய்யவில்லை. ஸ்நாக்ஸ் தேவையில்லை. புதிய கற்றல் வழிமுறைகள்தான் அடுத்த ஆண்டுக்கான உற்சாகமாக இருக்கிறது. அரபு அமீரகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்களின் முதல் நாள் பள்ளி அனுபவம் வேறுபட்டதாக இருந்தது.

காலையிலேயே எழுந்த அவர்கள் குளித்தார்கள், காலையுணவைச் சாப்பிட்டார்கள். வீட்டிலேயே லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள். இங்குள்ள பெற்றோர்களும் கொரோனா பரவல் குறையும் வரையில், சமூக இடைவெளியுடன் கூடிய ஆன்லைன் கற்றலையே விரும்புகிறார்கள்.

"அரபு அமீரகத்தில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கமாக குறையவேண்டும் என காத்திருக்கிறேன். மீதமுள்ள கல்வியாண்டில் தொலைநிலை வகுப்புகளையே நான் தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் எட்டாம் வகுப்பு மாணவர் அமல் சமீர்.

மேலும், "பள்ளி வளாகத்தில் இருப்பதை நாங்கள் தவறவிட்டாலும், எங்களில் பெரும்பாலான மாணவர்கள் எந்த விபரீத முயற்சியையும் எடுக்க விரும்பவில்லை. பள்ளி சூழல் இப்போது மிகவும் வித்தியாசமானது. வெர்ச்சுவல் வகுப்பில் எனது ஆசிரியர்கள் மற்றும் வகுப்புத் தோழர்களுடன் இணைந்திருப்பதை நான் உணரவில்லை" என்றும் கூறுகிறார் அந்த மாணவர்.

அரபு அமீரகத்தில் பல மாணவர்கள் முதல் நாள் பள்ளி அனுபவத்தை ஆன்லைன் மூலமே அனுபவித்துள்ளனர். "என் இரண்டு குழந்தைகளுக்கும் ஆன்லைன் கல்வியையே தேர்ந்தெடுக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு கொரோனா பரவலும் குறைந்தபாடில்லை. என் குழந்தைகளும் ஆன்லைன் தொலைநிலைக் கல்விக்குப் பழகிவிட்டனர் " என்று சுட்டிக்காட்டுகிறார் இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரான இரம் ரிஸ்வி.