வன்முறையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெற்கு சூடானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் தங்களது கடமையை செய்வதற்கும் தெற்கு சூடான் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவானதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அங்கு உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதனால் சுமார் 1.2 கோடிக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அமைதியை நிலைநாட்டுவதறகாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து உள்நாட்டு போருக்கு காரணமான முன்னாள் ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா தடை விதித்தது. இந்நிலையில் வன்முறையை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. அதேசமயம் தொடர்ச்சியான தடைகளால் தெற்கு சூடானில் அமைதியை ஏற்படுத்த முடியாது என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.