அமெரிக்கா, பிரேசில், கொலம்பியா மற்றும் பெரு ஆகிய நாடுகள் அமேசான் காடுகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பிரேசிலும் அமெரிக்காவும் இணைந்து அமேசான் காடுகளில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பிரேசில், கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளின் முக்கோண எல்லைப் பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா சார்பில் வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட 50 பேர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் ஹெர்குலஸ் சி-130 விமானம் மூலமாக, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் அமேசான் காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தப் பயிற்சி தென் அமெரிக்க நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய இடம் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது. போர் மட்டுமல்லாமல், இயற்கைப் பேரிடர், மக்கள் இடப்பெயர்வு ஆகியவற்றைக் கையாளவும் இந்தப் பயிற்சி உதவும் என பிரேசில் ராணுவம் கூறுகிறது. பயிற்சியின்போது, பிரேசில் காடுகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமேசான் காடுகளில் இதுவரை நடந்த போர்ப் பயிற்சிகளில் இதுவே மிகப் பெரியதாகும்.