உலகம்

டூத் பிரஷால் சுவரில் துளையிட்டு எஸ்கேப்பான கைதிகள்.. பான் கேக் ஷாப்பில் சிக்கிய சுவாரஸ்யம்

JananiGovindhan

சிறையில் இருந்து தப்பித்த இரண்டு கைதிகள் பிரபல சொகுசு ஹோட்டலில் பான் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வசமாக சிக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்திருக்கிறது.

கடந்த மார்ச் 20ம் தேதியன்று கைதிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும்போதுதான் இரு கைதிகள் தப்பித்தது தெரிய வந்ததாக நியூஸ்போர்ட் நியூஸ் ஷெரிஃப் அலுவலகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சிறையில் இருந்து தப்பிப்பதற்காக பல் துலக்கும் டூத் பிரஷ் மற்றும் ஒரு மெட்டல் உலோகத்தை கொண்டு சுவற்றை பெயர்த்து எடுத்திருக்கிறார்கள் அந்த கைதிகள். விசாரித்ததில் தப்பியது ஜான் கார்ஸா (37) , ஆர்லே நீமோ (43) ஆகிய இருவர் என தெரிய வந்திருக்கிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து 7 மைல் தொலைவுக்கு அப்பால் சென்ற இருவரும் International House of Pancakes என்ற சொகுசு ஹோட்டலில் பான் கேக் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.

கார்சாவையும், நீமோவையும் கண்ட அந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவர்களை பற்றி ஹாம்ப்டன் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த இருவருக்கு விலங்கிட்டு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கார்சா மீது நீதிமன்றத்தை அவமதித்தல் உட்பட பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் ஜெயிலில் தள்ளப்பட்டிருக்கிறார். அதேபோல நீமோ மீதும் கிரெடிட் கார்டு மோசடி, விதி மீறல், திருட்டு என பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த இணையவாசிகள் பலரும் ஹாலிவுட்டில் வந்த பிரபல படமான தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷனை போல இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதுபோக பலரும் கிண்டலாகவும் பதிவிட்டிருக்கிறார்கள். அதாவது, “அவர்கள் பான் கேக் சாப்பிட்டார்களா இல்லையா என்பது எனக்கு தெரிய வேண்டும்” என்றும், “பான் கேக் சாப்பிட சென்றவர்களால் எப்படி அதற்கு பணம் கொடுக்க முடிந்திருக்கும்?” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.