உலகம்

பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்

ஜா. ஜாக்சன் சிங்

பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்துக்கள், சீக்கியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினர் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று மாலை தங்கள் கடைகளில் அமர்ந்திருந்த ரஞ்சித் சிங் (42), குல்ஜித் சிங் (38) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா கண்டனம்

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர் கதையாகி வருகின்றன. பெஷாவர் நகரில் இரண்டு சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நீதி முன்பு நிறுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த கொலைச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்குமும் பொறுப்பேற்காத நிலையில் ஐஎஸ் (கே) அமைப்பே காரணமாக இருக்கும் என பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர். இதற்கு முன்பு பாகிஸ்தானில் நடந்த பல்வேறு சீக்கிய மக்களின் படுகொலைகளுக்கு அந்த அமைப்பே பொறுப்பேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.