உலகம்

உலகை உலுக்கிய சிரியாவின் இரண்டு புகைப்படங்கள்

webteam

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசே பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது. சிரியாவின் இரண்டு சிறுவர்களின் புகைப்படங்கள் உலகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக இருந்தது. சிரியாவில் யுத்தம் என்ற பெயரில் நடக்கும் கொடூரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருந்தது.

அய்லான் குர்தி

சிரியாவில் இருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கியை நோக்கி பயணமாயினர். அந்தப் படகு கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது. அவனது முகம் கடல் மணலில் புதைந்த நிலையில் ஊடகங்களில் புகைப்படம் வெளியானது. இது உலக மக்களின் மனதை உலுக்கியது. அந்தப் பிஞ்சு பாலகனின் உயிருக்கு நியாயம் கேட்டு உலகம் முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்தன.

ஒம்ரான்

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில்  அந்நகரில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவன் ஒம்ரான் படுகாயமடைந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் படம் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது.