இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே சாலையில் குளித்துக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் சர்ச்சையாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் சட்டை போடாமல் சாலையில் பயணித்து கொண்டே இருவர் குளித்துக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று காவல்துறையினரால் கைபற்றப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சாலையில் இவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். அந்த வீடியோவில் முன்பாக உட்கார்ந்திருப்பவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்கிறார். பின் இருக்கையில் இருப்பவர் வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு குளித்தபடியே பயணிக்கிறார். இடையிடையே வாகன ஓட்டிக்கும் பின்னால் இருக்கும் நபர் சோப்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறார். அந்த உற்சாகத்தில் இருவரும் சாலையில் சலம்பல் செய்து கொண்டு செல்கின்றனர். விசாரணையில் இதில் ஒருவரது பெயர் Huynh Thanh Khanh எனத் தெரியவந்துள்ளது. 23 வயது இளைஞர் இவர்.
இந்த வீடியோவை கண்ட சமூக வலைத்தளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ வியட்நாமிய மாகாணத்திலுள்ள பின் துவாங் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ Tuoi Tre News-இல் வெளியான உடனேயே அது உள்ளூர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனே அவர்கள் வண்டியின் உரிமை எண்ணை வைத்து அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் Huynh Thanh Khanh என கண்டறிந்தது காவல்துறை. அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமமே இல்லை என்பதும் அத்துடன் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, பிறருக்கு தொந்தரவு விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.