naftali bennett, yair lapid, netanyahu எக்ஸ் தளம்
உலகம்

நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி.. கைகோர்த்த இரண்டு சக்திகள்.. இஸ்ரேலில் பரபரப்பு!

இஸ்ரேலின் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இரண்டு தலைவர்கள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைகோர்த்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

வலதுசாரி கொள்கை உடைய லிகுட் கட்சியின் தலைவராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றி வரும் நபராக உள்ளார். இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் லிகுத் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகுவே களமிறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவருக்கு எதிராக இஸ்ரேலின் இரண்டு மிகப்பெரும் சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. இஸ்ரேலில் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் (naftali bennett) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் (yair lapid) ஆகியோர் தங்களது கட்சிகளை இணைத்து யாச்சாட் என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெஞ்சமின் நெதன்யாகு

இந்த கூட்டணி சார்பில் நஃப்தாலி பென்னட் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இது இஸ்ரேலின் மிகப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்புகள் அடிப்படையில், இந்த புதிய கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 26 முதல் 28 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுத் கட்சிக்கு 25 முதல் 27 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

naftali bennett, yair lapid

இஸ்ரேலில் எப்போதுமே ஒரு தனி கட்சி ஆட்சியை பிடித்ததில்லை. 3 முதல் 7 கட்சிகள் வரை சேர்ந்தே கூட்டணி ஆட்சியை பிடிக்கும். அந்த வகையில் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்களை எந்தத் தனிப்பட்ட கூட்டணியும் எளிதாகப் பெற முடியாது என்பதால் இந்த முறையும் இஸ்ரேலில் கூட்டணி கட்சிகளின் ஆட்சியே அமையும் என்று கூறப்படுகிறது.