அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் உள்ளது. அப்பகுதியில் உள்ள யூத அருங்காட்சியம் சாலையில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் இருவரும் நேற்று இரவு (மே 22) சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர், இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், சம்பவ இடத்திலேயே யாரோன் லிஷின்ஸ்கியும், சாரா மில்கிரிமும் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக வாஷிங்டன் டி.சி. காவல்துறையினர் எலியாஸ் ரொட்ரிகஸ் என்பவரை கைது செய்துள்ளனர். எலியாஸ் ரொட்ரிகஸிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், “பாலஸ்தீனம் சுதந்திரம் அடைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர், “உயிரிழந்த இரு அதிகாரிகளும் அடுத்த வாரம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். அதற்குள் இப்படி நிகழ்ந்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறேன்” என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், இஸ்ரேல் தூதர ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். யூத எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த கொலைகளை உடனடியாக தடுக்க வேண்டும். அமெரிக்காவில் எப்போதும் வெறுப்புக்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை.” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பேசியதாவது, “இஸ்ரேல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதை ஏற்க முடியாது. அமெரிக்க அரசு இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நேற்று இரவு வாஷிங்டனில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பயங்கரவாதி, இளம் ஜோடியான யாரோன் லிஷின்ஸ்கியையும், சாரா மில்கிரிமையும் சுட்டு கொன்றார். யாரோன் மற்றும் சாரா ஆகியோர் அடுத்த வாரம் ஜெருசலேமில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். யாரோனும், சாராவும் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. அந்த பயங்கரவாதி ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களை சுட்டு கொன்றுள்ளார்.
பணயக்கைதிகளை பொறுத்தவாஇ அவர்களை பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் செய்வோம். மேலும், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது பயணகைதிகளை அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
சென்ற வருடம் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 92,000 லாரிகளில் காசாவிற்கான உதவிப்பொருட்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. காசாவில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும் வகையில் போதுமான உணவுப்பொருட்களை நாங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தோம். ஆனால், எங்களுக்கான உதவியை ஹமாஸ் தடுத்து நிறுத்தியது. தற்போது பயங்கரவாதிகளைக்கொண்டு யாரோன் மற்றும் சாராவை சுட்டுக்கொன்றுள்ளனர். இதை நான் மிகவும் கடுமையாக கண்டிக்கிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தற்கு பல நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வாஷிங்டன் காவல்துறையின் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.