உலக வானிலை அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கையில், பசிபிக் பெருங்கடலில் உருவான ‘சூப்பர் எல் நினோ’ காரணமாக 2027 பிப்ரவரி வரை கடுமையான காலநிலை அச்சுறுத்தல்கள் உறுதி என கூறப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலிமையான இந்த எல் நினோ, உலகளவில் வறட்சி, வெப்ப அலைகள், காட்டாற்று வெள்ளம், தீவிர புயல்கள் அதிகரித்து, 2027 ஐ வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாற்றும் அபாயம் உள்ளது. நேபாள வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது..
பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அளவு அதிகரிக்கும் நிகழ்வே 'எல் நினோ' என அழைக்கப்படுகிறது. அப்படி எல் நினோ உருவானால் அது உலகம் முழுவதிலும் பெரும் வானிலை மாற்றங்களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு 'எல் நினோ' உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், கணிப்புக்கு மாறாக பசிபிக் பெருங்கடலில் வெப்பம் கடுமையாக அதிகரித்ததால் 'சூப்பர் எல் நினோ' (Supersized El Niño) உருவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட 2 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமாக வெப்பமடைந்துள்ளதால் அதன் விளைவாக 'சூப்பர் எல் நினோ' உருவாகியுள்ளது.
இந்த நிலையில், உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization - WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' காரணமாக உலகம் முழுவதும் கடுமையான காலநிலை அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் இந்த விளைவு 2027 பிப்ரவரி வரை நீடிக்க 100% வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மற்றும் வலிமையான எல் நினோ நிகழ்வாக மாறும் அபாயம் உள்ளது என்றும், இதனால் உலகம் முழுவதும் கடுமையான வறட்சி, வெப்ப அலைகள், எதிர்பாராத காட்டாற்று வெள்ளம் மற்றும் தீவிர புயல்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் தாக்கமாக 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாற வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எல் நினோ தொடர்ந்தால், இந்தியாவில் வரவிருக்கும் குளிர்காலத்தில் வெப்பம் அதிகரித்து, 2027 தொடக்கத்தில் கடுமையான கோடைக்கால வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும், பருவப் பயிர்கள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாய விளைச்சலுக்கு இது பெரும் சவாலாக அமையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும், தெற்காசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் மத்திய அமெரிக்காவில் இயல்பான மழைப்பொழிவு பெருமளவில் குறைவதால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விவசாய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கும் அதீதமான வெப்பத்தின் காரணமாகவே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதிகளவில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாகவே இமையமலையில் பனிப்பாறைகள் உருகி உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனாலே நேபாளத்தில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த சூப்பர் எல் நினோ தொடர்ந்து அதிகரித்தால் நேபாளம் போன்ற பல பாதிப்புகள் உலகை அச்சுறுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.