ட்விட்டர் லோகோ எக்ஸ் தளம்
உலகம்

ட்விட்டர் லோகோ | ரூ.30 லட்சத்திற்கு ஏலம்..

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

Prakash J

உலக பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நாள் முதல், அதில் பல்வேறு மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் செய்தார். குறிப்பாக, எக்ஸ் என அதன் பெயரை மாற்றிய அவர், ட்விட்டர் ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தினார். அதோடு ட்விட்டரின் லோகோவாக நீல நிற குருவி இருந்துவந்த நிலையில், அதனையும் மாற்றினார். குறிப்பாக, ட்விட்டரின் நீலநிற பறவை லோகோ சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது. இந்த லோகோ, 254 கிலோ கிராம் எடை கொண்டது. மேலும், 12 அடிக்கு 9 அடி (3.7 மீட்டர்க்கு 2.7 மீட்டர்) அளவிலும் இருந்தது.

ட்விட்டர்

கூடைப்பந்து வீரர் லாரி பேர்டின் நினைவாக 'லாரி' என்று அழைக்கப்படும் இந்த லோகோ, அண்மையில் ஏலம் விடப்பட்டது. அது ஏலத்தில் கிட்டத்தட்ட 34,375 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.30.10 லட்சம்) விற்கப்பட்டுள்ளது. அரிய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்யும் ஆர்ஆர் ஏல நிறுவனம் இதனை ஏலம் விட்டுள்ளது. இந்த லோகோ, சுமார் டாலர் 35,000க்கு வாங்கப்பட்டாலும், அதை வாங்கியவரின் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் அதே ஏலத்தில் அரிய வகை ஆப்பிள்-1 கணினி டாலர் 375,000க்கும், ஸ்டீவ் ஜாப்ஸ் (1976) கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை டாலர் 112,054க்கும் ஏலம்போனது.