உலகம்

ட்விட்டரில் தொடரும் பணிநீக்கம் - இந்த முறை யாருக்கு பாதிப்பு?

JustinDurai

2023ஆம் ஆண்டிலும் ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் கைமாறியதிலிருந்து அவர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 3,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். இப்படியிருக்கையில் 2023ஆம் ஆண்டிலும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாளா் குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது.

ட்விட்டர் தளத்தில் ட்வீட்டுகளை கண்காணிக்கும் முக்கியப் பிரிவான நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவில் பணியமர்த்தப்பட்டிருந்த ஏராளமான ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு துணைத் தலைவர் எல்லா இர்வின், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அயர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாட்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார் எனக் கூறப்படுகிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான தள ஒருமைப்பாட்டின் தலைவர் நூர் அசார் பின் அயோப் மற்றும் ட்விட்டரின் வருவாய்க் கொள்கையின் மூத்த இயக்குநர் அனலூயிசா டொமிங்குவேஸ் உள்ளிட்ட முக்கியமான உயரதிகாரிளும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.