உலகம்

`எனக்காக வருத்தப்படாதீர்கள்’- ட்விட்டர் சி.இ.ஓ போஸ்டிங் குறித்து பராக் அகர்வால் ட்வீட்!

நிவேதா ஜெகராஜா

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகியுள்ள நிலையில், ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவிநீக்கம் செய்யப்படுவாரோ என்ற கேள்விகள் தொடர்ந்து வந்தது. இவற்றுக்கு அவரேவும் ட்விட்டர் வழியாக பதிலளித்துள்ளார். முன்னராக, பராக் அகர்வால் பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு $42 மில்லியன் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியது.

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது தன் வசமாக்கியுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார் எலான் மஸ்க். இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டரை வாங்கியுள்ளார்.

இந்நிலையில், அடுத்து ட்விட்டர் நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக ஊழியர்கள் கூட்டமொன்றில் பேசிய ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், “ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகின. ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்தியர் பராக் அகர்வால் பதவி வகித்துவரும் நிலையில், எலான் மஸ்குடனான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அந்த நிறுவனத்தை யார் வழிநடத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியது.

இப்படியான சூழலில், ட்விட்டர் சி.இ.ஓ.-வாக தானே நீடிப்பதாக உறுதிசெய்துள்ளார் பராக் அகர்வால். மைட்டி என்ற இணையதள ப்ரவுசர் ஒன்றின் நிறுவனரான சுஹைல் என்பவர் ட்விட்டரில், `பராக் அகர்வாலை நினைக்கையில் சற்று வருத்தமாக உள்ளது. ட்விட்டருக்காக அவர் எல்லா திட்டங்களையும் வகுத்திருந்தார். இப்போது அவரது முழு குழுவின் அதே நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பராக் அகர்வால், `உங்கள் கணிவுக்கு நன்றி. ஆனால் எனக்காக நீங்கள் வருந்தவேண்டாம். ஏனெனில் இறுதியில் மிக முக்கியமானது ட்விட்டர் சேவையை மேம்படுத்துவோர்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல தனது பிற ட்விட்டர் பதிவுகளில் `இரைச்சல்களுக்கு செவிசாய்க்காமல் நம் வேலையை பார்ப்போம். நான் இந்த ட்விட்டரில் இணைந்து பணியாற்ற தொடங்கியது ட்விட்டரை சிறப்பாக மாற்றவும், தேவையான இடத்தில் சேவையை சரியாக வலுப்படுத்தவும்தான். ஆகவே இரைச்சலைப் பொருட்படுத்தாமல் கவனத்துடன் துரிதமாக நம் பணியைத் தொடர வேண்டும். அப்படி பணியாற்றும் ஊழியர்களை பார்க்கையில் பெருமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் பராக் அகர்வாலின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு போலி ட்விட்டர் கணக்கு வழியாக அடையாளம் தெரியாத நபரொருவர் பராக் அகர்வாலை டேக் செய்து, `நாம் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டோம் என்றல்லவா நான் நினைத்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பராக், `இல்லை இல்லை, நாம் இன்னும் இங்குதான் உள்ளோம்’ என்றுள்ளார்.

இதன்மூலம் பராக் அகர்வால் சி.இ.ஓ.வாக நீடிப்பது உறுதியாகியுள்ளது.