உலகம்

சர்ச்சை கருத்து: ட்ரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

webteam

அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளன.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதர உறுப்பினர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நாடாளுமன்ற அவையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு பூட்டப்பட்டது.

இதனிடையே டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டரில் “இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல். இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும். நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

வன்முறைக்கு மத்தியில், பதவி விலகும் ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியது என்றும், ஆகவே அவரது வீடியோவை கட்டுப்படுத்துவது எனவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ரம்ப்பின் இந்தப் பதிவு வன்முறைக்கு வித்திடும் எனவும், அதற்கு பதிலளிக்கவோ அல்லது மீள் பதிவிடவோ முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற முற்றுகையின்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியதின் வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கிவிட்டது. இது வன்முறையின் அபாயத்தை குறைப்பதற்குப் பதிலாக தூண்டும் வகையில் இருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டு துணைத் தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் பக்கமும் 24 மணிநேரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.