உலகம்

"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்"- ஆய்வில் தகவல்

jagadeesh

நீண்ட நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதென ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

4 முதல் 7 வயது வரையிலான 1,480 சிறுவர்களின் வாழ்க்கைமுறை அடிப்படையில் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான மூல காரணம் குறித்து ஸ்பெயினை சேர்ந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. உடல் உழைப்பு, தூங்கும் நேரம், தொலைக்காட்சி முன் செலவிடும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதே வேளையில் சிறுவர்களின் எடை, உயரம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டன. 

இதில் குறைந்த அளவே இயங்கி அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கண்டறியப்பட்டது. அதே வேளையில் அதிக உடல் இயக்கம் இல்லாமல் உட்கார்ந்தபடியே படிப்பது, வரைவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு உடல் பருமன் ஏற்படவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கான விளம்பரங்களால் கவரப்பட்டு அதனை அதிகளவில் உட்கொள்வதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் உடல்பருமன் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் தொலைக்காட்சி காணும் சிறுவர்களுக்கு தூக்கம் கெடுவதால் அதுவும் உடல் பருமனுக்கான முக்கிய காரணியாக உள்ளதென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.