உலகின் அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை கொண்டு எரிபொருள் தயாரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டு பயன்படுத்திய பிளாஸ்டிக்கின் அளவைவிட, கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் அளவு மிக அதிகம் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வு. நீர், நிலங்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை. 'பிளாஸ்டிக் பொருட்களைக் கைவிட்டு, சூழலுக்குக் கேடு விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்துங்கள்' - என்று ஐநா நல்லெண்ண விளம்பரங்களையும் செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 26 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது என ஐ.நா ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்து உயிர்களும் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. அழியா பிளாஸ்டிக்கானது ஆறுகளிலும், கடல்களிலும் கலந்து நீர்வளத்தையும், நிலவளத்தையும் பெரிதும் பாதித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் 2050ஆம் ஆண்டுக்குள் கடல் முழுவதும் பிளாஸ்டிக் மட்டுமே ஆக்கிரமிக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், உலகிற்கு பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றி பிரான்ஸ் ஆய்வாளர்கள் சாதனைப்படைத்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்திவரும் பிளாஸ்டிக் கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை ஆக்சிஜன் இல்லாத சூழலில் 450 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தினால் திரவமாக மாறுகிறது. இதற்காக 'கிறைஸ்லலிஸ்' என்ற இயந்திரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு, ஹைட்ரோ கார்பன்களாக மாற்றப்படுகின்றன. இந்த எரிபொருள் எண்ணெய்யை ஜெனரேட்டர்கள், மோட்டார் படகுகள், மின்விளக்குகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட எரிபொருள் எண்ணெயில் 65 சதவீத டீசல், 18 சதவீதம் பெட்ரோல், 7 சதவிகித கார்பன் மற்றும் 10 சதவிகிதம் வெப்பத்திற்கான எரிவாயு போன்றவை இருப்பதாக ஆய்வாளர் கிறிஸ்டோபர் செலஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கண்டுப்பிடிப்பு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை அழிப்பது போலவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மாற்று எரிபொருளாகவும் உருவெடுத்துள்ளது. தற்போது சோதனை முயற்சியாக 10 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிபொருள் எண்ணெயாக மாற்றப்பட்டுள்ளன. 'கிறைஸ்லலிஸ்' என்ற இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 40 லிட்டர் எரிபொருளை உருவாக்கலாம் என்கிறார் கிறிஸ்டோபர்.
பிளாஸ்டிக்கை ஒழிப்பது மட்டுமின்றி, அதனை மாற்று எரிசக்தியாக உருவாக்கி இருக்கும் கிறிஸ்டோபருக்கு தற்போது விஞ்ஞானிகள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.