இலக்குகளை அடைவதும் அதை முறியடிப்பதுமே சாதனையாகப் பார்க்கப்படுகிறது. நாள்தோறும் உலகில் பல சாதனைகளப் படைக்கப்படுகின்றன; முறியடிக்கப்படுகின்றன. அந்த வகையில் துருக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர், குறிப்பிட்ட இலக்கை நோக்கி கோடரியை வீசி சாதனை படைத்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்தவர் ஒஸ்மான் குர்கு. இவர் கின்னஸில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
183 அடி தூரத்தில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி, கோடரியை வீசி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே 164 அடி தூரத்தில் இருந்து வீசப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சாதனை ஒஸ்மானுக்கு எட்டாவது கின்னஸ் சாதனையாகப் பதிவாகி உள்ளது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒஸ்மான், தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிகிறார். இதற்காக தாம் விரும்பிய அளவுக்குப் பயிற்சி பெறவில்லை என்று சொல்லும் ஒஸ்மான், பலர் படைக்கும் சாதனைகளைக் கண்காணிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”இன்னும் பல சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் சாதனை படைத்தவராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது" என தெரிவித்துள்ளார்.