செய்தியாளர் - கார்த்திகேயன்
‘ஒரு நொடியில் எமனைப் பார்த்துவிட்டு வந்தேன்’ என்று, சிலர் தங்களது மோசமான அனுபவங்களைக் கூறுவார்கள். ஆனால், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம், அந்த வாக்கியத்தை உண்மையாக்கி இருக்கிறது. அதாவது, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் பகுதியில் இருந்து, துனிசியா நாட்டிற்கு, 220 பயணிகளுடன் டர்கிஷ் ஏர்லைன் விமானம் பயணித்துக் கொண்டிருந்துது. துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, வானிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இடி மின்னலுடன் கூடிய புயலுக்கு நடுவே விமானத்தைத் தரையிறக்க 3 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், ஒவ்வொரு முறை தரையிறக்க முயன்றபோதும், அது தோல்வியிலேயே முடிந்தது. குறிப்பாக, 3-ஆவது முயற்சியின்போது, விமானம் திடீரென கீழ்நோக்கி சரியத் தொடங்கியுள்ளது. மேலும், கடுமையான குலுக்கலுக்கு விமானம் ஆளானதால், பயணிகள் அலறித் துடித்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த மரீனா என்ற பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பான பதிவில், "பயணம் முழுவதும் மிகவும் அமைதியாகத்தான் இருந்தது. ஆனால், விமானம் கீழே இறங்கத் தொடங்கியதும் நிலைமை பயங்கரமாக மாறிவிட்டது. என் வாழ்க்கையில் இவ்வளவு பயந்ததே இல்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகள் அனைவரும் இருக்கைகளைக் பலமாகப் பிடித்துக்கொண்டு அச்சத்தில் அலறியதாகவும் அவர் தெரிவித்தார்.
துனிஸ் விமான நிலையத்தில் தொடர்ந்து நிலவிய மோசமான வானிலை காரணமாக, அங்கு தரையிறங்குவது பாதுகாப்பற்றது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, துனிஸ் நகருக்கு தெற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள என்ஃபிதா-ஹம்மமெட் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மாற்றி விடப்பட்டு, அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், மோசமான வானிலையைச் சமாளித்து விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கிய பைலட்டுகளுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.