துருக்கியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 39 பேரைக் கொலை செய்த சம்பவத்துக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.
துருக்கியில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். இயக்கம் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் ஒருவர் இந்தச் சாதனையைச் செய்தார் என்று கூறியிருக்கிறது. இதனிடையே, தாக்குதல் நடத்திய நபரைத் தேடும் பணியில், துருக்கிய காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இஸ்தான்புல் நகரில் ரெய்னா கேளிக்கை விடுதியில் 500க்கும் அதிகமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 1.15 மணி அளவில் பயங்கர ஆயுதங்களோடு அங்கு வந்த நபர், அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். சுமார் 7 நிமிடங்கள் துப்பாக்கிசூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர். 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். இந்த தாக்குதலுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.