அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியிலிருந்து துளசி கபார்ட் ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் ட்ரம்பின் 2.0 அரசில், அந்நாட்டின் உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டு தேர்வு செய்யப்பட்டார். தனது மத நம்பிக்கையின் காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவே கருதப்பட்ட, அமெரிக்காவின் முதல் இந்து எம்பியான இவர், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்த தனது ராஜினாமா கடிதத்தில், ”என் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான ஒரு வகை எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அவருடன் இருந்து அவருக்கு முழு ஆதரவையும் அளிப்பதற்காக நான் பொதுச் சேவையிலிருந்து விலக வேண்டியுள்ளது” எனத் தெர்வித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அதிபர் ட்ரம்பிடம் துளசி கப்பார்டு தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்பும் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தை (ODNI) அவர் வழிநடத்தும் கடைசி நாள் ஜூன் 30 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், வெள்ளை மாளிகைதான் கப்பார்டை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்தார். கப்பார்ட் விலகிய பிறகு, தேசிய உளவுத்துறையின் முதன்மைத் துணை இயக்குநர் ஆரோன் லூகாஸ், தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராகப் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவராக துளசி கப்பார்டு அறியப்படுகிறார். அவ்வமைப்பின் அளவைக் குறைக்கவும், ஆண்டுக்கு 700 மில்லியன் டாலருக்கும் மேலாக செலவுகளைக் குறைக்கவும் , அரை மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட அரசாங்க ஆவணங்களை வகை நீக்கம் செய்யவும் துளசி முயற்சி மேற்கொண்டுள்ளார். வகைப்படுத்தப்படாத அந்தப் பதிவேடுகளில், ட்ரம்ப்-ரஷ்யா விசாரணை, ஜான் எஃப் கென்னடி மற்றும் ராபர்ட் எஃப் கென்னடி ஆகியோரின் படுகொலைகள் தொடர்பான கோப்புகளும், 2016 அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கிராஸ்ஃபயர் ஹரிகேன் விசாரணையின் தோற்றம் தொடர்பான ஆவணங்களும் அடக்கம்.