உலகம்

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: 30 பேர் பலி

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: 30 பேர் பலி

webteam

இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலு நகரத்தை சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து, இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்த நிலையில், மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலாவேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது. 

பல அடி உயரத்துக்கு வேகமாக வந்த அலைகள் ஊருக்குள் பல மீட்டர் தொலைவுக்கு உள்ளே புகுந்தன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்தன. வாகனங்கள் மற்றும் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சுனாமி தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்கு 30 பேர் பலியாகியுள்ளனர்.